மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35603
Export date: Wed Feb 20 18:35:57 2019 / +0000 GMT

முதல்வர் மீதான புகார்கள்: ஐகோர்ட் 5 நாள் கெடு


சென்னை, செப்.12 :முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வரும் 17-ந் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்தார்.

முதலமைச்சர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கி, சட்ட விரோத ஆதாயம் அடைந்ததாகவும், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான புகாரில் எந்த வித நடவடிக்கையையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுக்கவில்லை என்று கூறினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் ‘உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கியதாக கூறப்படும் புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் எடுத்தவர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டர்களை உலக வங்கியும் கண்காணித்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அதை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளோம். அதில் தான் முகாந்திரம் உள்ளதா என்பது தெரியவரும்.

மனுதாரர் புகார் அளித்ததற்காக என்பதற்காக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய முடியாது. விஜிலன்ஸ் ஆணையர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதன்படி தான் செயல்பட முடியும்' என்று வாதாடினார்.தற்போதைய நிலையில் மனுதாரரின் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மனுதாரரின் புகார் அடிப்படையில் தினசரி மேற் கொண்ட விசாரணை குறித்த விரிவான அறிக்கையை பதில் மனுவாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் 17-ந் தேதி அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Post date: 2018-09-12 09:14:30
Post date GMT: 2018-09-12 09:14:30

Post modified date: 2018-09-12 09:14:30
Post modified date GMT: 2018-09-12 09:14:30

Export date: Wed Feb 20 18:35:57 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com