மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35588
Export date: Sat Feb 16 3:09:49 2019 / +0000 GMT

குடிசை தீப்பற்றி எரிந்து 3 குழந்தைகள், தாய் பலி


விழுப்புரம், செப்.12:விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிசை வீட்டில் தீப்பிடித்து எரிந்ததில் 3 குழந்தைகள் மற்றும் தாய் உடல் கருகி உயிரிழந்தனர்.

திருக்கோவிலூரை அடுத்த மேலக்குண்டூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன், விழுப்புரத்தில் தங்கி வேலை செய்து வந்தார். அவரது மனைவி தனலட்சுமி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தைகளான கமலேஷ்வரன், விஷ்ணுபிரியன், ருத்ரன் ஆகியோருடன் மேலக்குண்டூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் இளங்கோவனின் தந்தை தேனீர் வாங்குவதற்காக கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது தனலட்சுமி மற்றும் குழந்தைகள் இருந்த வீடு தீப்பற்றி எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தோர் தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் தீ முழுவதும் பரவி முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தபோது, குடிசைக்குள், தனலட்சுமி மற்றும் 3 குழந்தைகள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டனர். தகவலறிந்து வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கணவன் மீது கொண்ட கோபத்தால் மண்எண்ணெய் ஊற்றி வீட்டை கொளுத்தி குழந்தைகளுடன் தனலட்சுமி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது குழந்தைகளை கொன்று விட்டு அவர் தீக்குளித்தாரா என சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிவில்தான் இது விபத்தா அல்லது கொலையா தெரியவரும்.
Post date: 2018-09-12 08:40:54
Post date GMT: 2018-09-12 08:40:54

Post modified date: 2018-09-12 08:40:54
Post modified date GMT: 2018-09-12 08:40:54

Export date: Sat Feb 16 3:09:49 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com