மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35577
Export date: Sat Feb 16 3:50:16 2019 / +0000 GMT

பிஜேபியுடன் அதிமுக மோதல்


சென்னை, செப்.11: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விவகாரத்தில் பிஜேபிக்கும் ஆளும் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி மத்திய அரசையும், பிஜேபியும் கடுமையாக சாடி ஆளும் கட்சியின் நமது அம்மா இதழில் கட்டுரை தீட்டப்பட்டுள்ளது.  பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விலையேற்றத்தை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி ஒன்றிணைந்து பாரத் பந்தை நடத்தியது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த விலையேற்றம் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் வாட்வரியை அந்தந்த மாநில அரசுகள் குறைத்துள்ளன. அதே போன்று தமிழக அரசும் வாட்வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் என பல்வேறு தரப்பினர் கோரிவருகின்றனர்.  இந்நிலையில் சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்த பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி கேட்டதற்கு, மத்திய அரசுக்குதான் வரி வருவாய் பெருமளவில் வருகிறது. எனவே இந்த எரிபொருள்கள் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்கவேண்டும். இந்த விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம். மாநில அரசால் வாட் வரியை குறைக்க இயலாது என்றார்.இதேபோல் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை நந்தனத்தில் அளித்த பேட்டியில், மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் தான் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்றார்.
ஆனால் டெல்லியில் மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் மாநில அரசுகளுக்கு 40 சதவீதம் வாங்குகிறோம். எனவே மாநில அரசுதான் விலையை குறைக்கவேண்டும் என்றார்.இதனிடையே ஆளும் கட்சியின் நமது அம்மா இதழில் இன்று சித்ரகுப்தன் என்ற பெயரில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் மனிதன் நிம்மதியாய் வாழும் சூழல் இல்லை என்கிற அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையேற்றம் பெருங் கவலை தருகிறது. எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியவில்லை. சிலிண்டர் விலையேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே நித்திரை துறக்கிறது. அடுப்பெரியும் அதே வேளை சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கோ அடி வயிறும் எரியுதே இதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு அபாராமாய் நடிக்குதே மேலும் தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிற சிறுமை.. அத்தனையும் சேர்ந்து தான் ஆவேசம் கொள்ளச் செய்யுதோ ஆகாயவிமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதே என இந்த கட்டுரையில் கடுமையாக சாடப்பட்டுள்ளது.குட்கா ரெய்டு, பொதுப்பணிதுறை ஒப்பந்தாரர் வீடுகளில் ரெய்டு என மத்திய அரசின் செயல்பாடு மீது கடும் அதிருப்தியை அடைந்துள்ள அதிமுக, பிஜேபியை பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டி கடுமையாக சாடியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Post date: 2018-09-11 10:45:45
Post date GMT: 2018-09-11 10:45:45

Post modified date: 2018-09-11 10:45:45
Post modified date GMT: 2018-09-11 10:45:45

Export date: Sat Feb 16 3:50:16 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com