விசாரணை கமிஷனில் கவர்னரின் செயலாளர்
சென்னை,செப்.11: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையத்தில் முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா நேரில் ஆஜாராகி விளக்கம் அளித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. சசிகலா உறவினர்கள், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அவரது கணவர் மாதவன், பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், எய்மஸ் மருத்துவர்கள் என ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை ஆணையத்திற்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தது.
மேலும், முறையாக ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல், இறந்த நாள் வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜராகி உள்ளனர். இதயநோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், தலைமை பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர். ஏற்கனவே சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பது தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்களிடம் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று தமிழக முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவின் செயலராக இருந்த ரமேஷ்சந்த் மீனா ஆஜரானார். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, நலம் விசாரிக்க வந்த கவர்னர் வித்யாசாகர் ராவை பார்த்து, அவர் கையசைத்தது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தமிழக பொறுப்பு கவர்னராக வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள புத்தகத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றிருந்த போது கண்ணாடி வழியாக பார்த்த போது, ஜெயலலிதா தன்னை பார்த்து கையசைத்தாக கூறியிருந்தார், அதன் அடிப்படையில் அப்போதைய காலகட்டத்தில் அவரது செயலாளராக இருந்த ரமேஷ்சந்த் மீனாவிடம் ஆணைய எழுப்பிய கேள்விகளுக்கு ரமேஷ்சந்த் மீனா பல்வேறு விளக்கம் அளித்தாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|