விழுப்புரம், செப்.10:விழுப்புரம் அருகே மொபட்டில் சென்ற போது தாயின் மடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
விழுப்புரம் அருகே உள்ள சங்கீத மங்கலம் காலனியை சேர்ந்தவர் சத்திய நாராயணன் (வயது 35). இவருடைய மனைவி கிளிராமேரி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று சத்திய நாராயணன், தனது மனைவி கிளிராமேரி, குழந்தை யோகேசுடன் நேமூரில் இருந்து கஞ்சனூர் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
வெங்காயகுப்பம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டரை சத்தியநாராயணன் முந்திச்செல்ல முயன்றார். அப்போது டிராக்டரில் இருந்த வைக்கோல் உரசியதில், கிளிராமேரியின் மடியில் இருந்த குழந்தை யோகேஷ் தவறி கீழே விழுந்துசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.