சென்னை, செப். 10: 57 சவரனுடன் தலைமறைவான நகை கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 20 சவரன் நகை மீட்கப்பட்டது.
அண்ணாநகர் ரவுண்டானா அருகே பிரபல நகை கடை உள்ளது. இந்த நகை கடையில் புதுச்சேரியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன் வேலையில் சேர்ந்துள்ளார்.
நகைகளை பட்டறைக்கு கொண்டு சென்றுவரும் வேலை பார்த்துவந்துள்ளார். இதனிடையே, கடந்த வெள்ளிகிழமையன்று, கணக்கு வழக்கு பார்க்கும்போது கடையிலிருந்த 57 சவரன் நகை மாயமானது தெரியவந்தது.
அதேசமயம், முகமது ரபீக்கும் பணிக்கு வராமல் இருக்கவே, இது குறித்த புகாரின்பேரில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து சந்தேகத்தின் அடிப்படையில், அக்கடை ஊழியர் முகமது ரபீக்கை தேடிவந்தனர்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த முகமது ரபீக்கை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 சவரன் நகை மீட்கப்பட்டது. மீதி நகைகளையும் மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.