மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35520
Export date: Tue Mar 19 2:17:23 2019 / +0000 GMT

பா.ம.க. - வி.சிறுத்தைகள் கட்சியினர் மோதல்


விழுப்புரம், செப். 10:கிளியனூர் அருகே பா.ம.க. கொடி கம்பம் நடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு கட்சி யினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

கிளியனூர் ஒன்றிய பா.ம.க. சார்பில் நெசல், கழுப்பெரும்பாக்கம் உள்பட பல்வேறு கிராமங்களில் பா.ம.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மாவட்ட செயலாளர் சேது, மாநில துணைத்தலைவர் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

மாநில துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கொடி ஏற்ற வந்தார். அவருடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமார், ரத்தினம், திண்டிவனம் தொகுதி செயலாளர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு வந்தனர். அவர்கள், பா.ம.க. கொடி கம்பம் நடப்பட்டுள்ள இடம் ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாளின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி ஏற்றப்பட்ட இடம் என்று கூறி, பா.ம.க. கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் வந்து பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் சமரசம் ஏற்படததால் பா.ம.க. நிர்வாகிகள், கொடியை ஏற்றிவிட்டு பின்னர், கொடி கம்பத்தை வேறு இடத்தில் நட்டுவிடுவதாக கூறினர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு மத்தியில் பா.ம.க.வினர் கட்சி கொடியை ஏற்றினர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ம.க. தொண்டர் இளஞ்செழியன் (வயது21) என்பவர் தாக்கப்பட்டார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. நிலைமை மோசமானதை தொடர்ந்து மோதலில் ஈடு பட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

போலீசாரின் தடியடியால் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களின் இருசக்கர வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றனர். அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் எடுத்துச்சென்றனர். அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Post date: 2018-09-10 11:10:53
Post date GMT: 2018-09-10 11:10:53

Post modified date: 2018-09-10 11:10:53
Post modified date GMT: 2018-09-10 11:10:53

Export date: Tue Mar 19 2:17:23 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com