மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35469
Export date: Fri Jan 18 22:57:07 2019 / +0000 GMT

பாரத் பந்த் : வட மாநிலங்களில் வன்முறை


புதுடெல்லி, செப்.10:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல்வேறு வட மாநிலங்களில் வன்முறை வெடித்தது.

குஜராத்தில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டதுடன், டயர்களை எரித்து வன்முறையில் இறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜயனியில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் நிலையங்களை தாக்கி சேதப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, பீகார் மாநிலம் பாட்னா ஆகிய இடங்களில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மும்பையில் அந்தேரி ரெயில் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால், மும்பையில் இருந்து செல்லும் பல ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

பீகாரில் பல இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே புதுடெல்லியில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மதசார்பற்ற ஜனதா தள முன்னாள் தலைவர் சரத் யாதவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் பேசிய ராகுல் காந்தி, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டில் விவசாயிகள், பொதுமக்கள், பெண்கள் ஆகிய அனைத்து பிரிவினரையும் மோடி அரசு இருட்டில் தள்ளி விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
Post date: 2018-09-10 09:31:22
Post date GMT: 2018-09-10 09:31:22

Post modified date: 2018-09-10 09:31:22
Post modified date GMT: 2018-09-10 09:31:22

Export date: Fri Jan 18 22:57:07 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com