மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35456
Export date: Wed Feb 20 7:12:28 2019 / +0000 GMT

தேனியில் புல்லட் நாகராஜன் சிக்கினார்


தேனி, செப். 10: காவல்துறை உயரதிகாரிகளை தொலைபேசியில் மிரட்டிய வழக்கில் தேடப்பட்டுவந்த ரவுடி புல்லட் நாகராஜனை, தேனி பெரியகுளம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு மடக்கிபிடித்து கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி உட்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006-ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த வாரத்தில், சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பெண் மருத்துவர் மீது வீசினார். இதையறிந்த மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நாகராஜனின் அண்ணன், நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். தன்னை எஸ்.பி. ஊர்மிளா அடித்ததை தம்பி நாகராஜனிடம் அவர் கூறியதாக தெரிகிறது. உடனே எஸ்.பி. ஊர்மிளாவை செல்போனில் தொடர்புகொண்ட புல்லட் நாகராஜன் மிரட்டல் விடுத்து பேசினார். இந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

இதனையடுத்து, நாகராஜன் தன்னை மிரட்டியது குறித்து, எஸ்.பி. ஊர்மிளா போலீசில் புகார் செய்திருந்தார். இது தொடர்பாக பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா விசாரணை நடத்தினார். போலீஸ் எஸ்.பி. ஊர்மிளாவை மிரட்டிய சம்பவம் ஓய்வதற்குள், இது தொடர்பாக விசாரணை நடத்திவந்த இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் புல்லட் நாகராஜன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த ஆடியோவும் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையை சேர்ந்தவர்களுக்கே இந்த நிலைமையா? என்ற கோணத்தில் ரவுடி மிரட்டல் விடுத்த விவகாரம் சூடுப்பிடிக்க, உடனடியாக, பெரியகுளம் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தேனி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று நாகராஜனை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில், நாகராஜன் தனது வீட்டில் இருந்து வெளியே செல்வதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரது வீட்டை தீவிர போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தனர். நாகராஜன் வீட்டை விட்டு வெளியே வந்ததும், அவரை போலீசார் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து, பெரியகுளம் தென்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த புல்லட் நாகராஜனை, தனிப்படை போலீசார் சுற்றி
வளைத்தனர்.

போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற புல்லட் நாகராஜனை போலீசார் அடித்து உதைத்து கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, நாகராஜனை தேனிக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அவரிடமிருந்து 2 கைத்துப்பாக்கி, 3 கத்தி, செல்போன்கள், கள்ள நோட்டு, 10க்கும் மேற்பட்ட போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Post date: 2018-09-10 09:15:56
Post date GMT: 2018-09-10 09:15:56

Post modified date: 2018-09-10 09:15:56
Post modified date GMT: 2018-09-10 09:15:56

Export date: Wed Feb 20 7:12:28 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com