மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35430
Export date: Wed Feb 20 23:41:52 2019 / +0000 GMT

வன்முறை ஒழிப்புக்கு அடித்தளம்
சமூக ஆர்வலர்கள்,கவிஞர்கள், வழக்கறிஞர்கள் , எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு எப்போதுமே சமுதாயத்தில் நன்மதிப்பு உண்டு. இவர்கள் சமூக சீர்கேடுகளை சாட வேண்டும். மக்களுக்கு அநீதி ஏற்படும் போது குரல் கொடுக்க வேண்டும். இதை விடுத்து தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், அவர்கள் இடும் கட்டளைகளை செயல்படுத்த முன்வருவதும் ஏற்கத்தக்கது அல்ல.

இந்தியாவில் மாவோயிஸ்ட் அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்று. இவர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அரசாங்கத்துக்கு எதிராக சதி வேலையில் ஈடுபடுவதும் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபடுவதும் இவர்களது வழக்கமாக இருந்து வருகிறது. மகாராஷ்ட்ராவில் பீமா கோரேகான் என்பது தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதி. கடந்த ஆண்டு இங்கு கலவரம் நடந்தது. இந்த கலவரத்தை தூண்டி விட்டதாகவும், பிரதமர் மோடியை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாகவும் மகாராஷ்ட்ரா போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களில் வரவர ராவ் ஒரு கவிஞர். கவுதம் நவ்லாகா மனித உரிமை ஆர்வலர். சுதா பரதத்வாஜ் என்பவர் தொழிற்சங்கவாதி. வெர்னான் கோன்சால்ஸ் என்பவர் சமூக ஆர்வலர். இந்த ஐந்து பேரை கைது செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஐவரையும் அவரவர் வீடுகளிலேயே காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே மகாராஷ்ட்ரா போலீஸ் கூடுதல் டிஜபி பீம்பீர்சிங் அளித்தப் பேட்டியில், அசைக்க முடியாத ஆதாரங்கள் அடிப்படையிலேயே கைது நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் மோடியை 1991ல் ராஜீவ்காந்தியை கொன்றது போல் கொலை செய்ய வேண்டும் என்று எழுதப்பட்ட கடிதம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து மாவோயிஸ்ட்களுக்கு ஆயுதங்களை கடத்தி வருவதற்கு உடந்தையாக இருந்ததை நிரூபிக்க முடியும் என்று அவர் மேலும்கூறியிருக்கிறார். 2012ல் ஐ.மு.கூட்டணி ஆட்சி நடந்தபோதே மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக 128 அமைப்புகள் மீது சந்தேகம் ஏற்பட்ட தகவலும் இப்போது வெளியாகியுள்ளது.

கைது நடவடிக்கை சரியா? தவறா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஆனால் வன்முறைக்கான அடித்தளம் தகர்க்கப்பட வேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.
Post date: 2018-09-09 10:14:59
Post date GMT: 2018-09-09 10:14:59

Post modified date: 2018-09-09 10:14:59
Post modified date GMT: 2018-09-09 10:14:59

Export date: Wed Feb 20 23:41:52 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com