மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35428
Export date: Mon Feb 18 22:33:57 2019 / +0000 GMT

விலை உயர்வை கட்டுப்படுத்துக


பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே போவது பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கி உள்ளது. வாகன ஓட்டிகளின் அன்றாடச் செலவு அதிகரித்து இருக்கிறது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப சரக்கு லாரிக் கட்டணம் உயரும் என்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இந்தியா நாள் தோறும் 4.37 மில்லியன் பேரல் கச்சாஎண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதை தனது நட்பு நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதை மீறி ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்று அதிபர் டிரம்ப் பகிரங்கமாகவே மிரட்டியுள்ளார்.

இதனால் ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை. மேலும் சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 71 ஆக சரிந்து இருக்கிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு டாலர் கணக்கில் அதிக பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. இது தவிர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்து விட்டன.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சார எண்ணெயின் விலை பேரலுக்கு 75 டாலரை மிஞ்சி விட்டது. இந்த விலை ஏற்றம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் சரிவு ஆகியவற்றை அப்படியே நுகர்வோர் மீது இந்திய அரசு திருப்பி விட்டிருக்கிறது. அதனால் பத்து நாட்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை நாள் தோறும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85 ஐயும், டீசல் விலை ரூ. 75 ஐயும் தாண்டிவிட்டது. அடுத்த சில நாட்களில் நூறு ரூபாயை எட்டி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்திலும் கூட பெட்ரோல் மீது மத்திய அரசு லிட்டருக்கு ரூ. 19.48ம் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 15.33ம் உற்பத்தி வரி விதிக்கிறது. தமிழக அரசு தனது பங்காக பெட்ரோல் விலையில் 34 சதவீதமும் டீசல் விலையில் 25 சதவீதமும் வாட் வரி விதிக்கிறது. நுகர்வோர் அவதிப்படும் இந்த நேரத்திலாவது மத்திய, மாநில அரசுகள் வரி விதிப்பை குறைக்க முன் வர வேண்டும்.
Post date: 2018-09-09 10:12:30
Post date GMT: 2018-09-09 10:12:30

Post modified date: 2018-09-09 10:12:30
Post modified date GMT: 2018-09-09 10:12:30

Export date: Mon Feb 18 22:33:57 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com