மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35426
Export date: Tue Mar 19 2:07:42 2019 / +0000 GMT

ஆசியப் போட்டி தந்த நம்பிக்கை


இந்தோனேசியாவில் நிறைவடைந்துள்ள 18வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா 69 பதக்கங்கள் பெற்றிருப்பது ஒளிமயமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் பெற்றுள்ள இந்தியா பதக்கம் பெற்ற நாடுகள் வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. 2010ல் கிடைத்த 65 பதக்கங்களே இதுவரை பெரிய பொக்கிஷமாக இருந்ததை இந்த ஆசியப் போட்டி முறியடித்து இருக்கிறது. இந்த தடவை இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வெள்ளி வென்ற இந்திய ஸ்குவாஷ் பெண்கள் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதே போல் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியில் தமிழகத்தில் பணியாற்றும் ரூபிந்தர் பால் சிங், மற்றும் ஸ்ரீதேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தங்கம் வென்ற இந்திய ஆண்களில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இடம் பெற்றிருந்த சத்யன், சரத்கமல், அமல்ராஜ் ஆகிய மூவரும் தமிழர்கள். பாய்மர படகோட்டுதல், டென்னிஸ் போட்டிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்திய அணியில் மாநிலம் வாரியாக பதக்கம் வென்ற வீரர்கள் எண்ணிக்கையில் அரியானா, பஞ்சாபுக்குப் பிறகு தமிழகம் 3வது இடத்தைப் பிடித்திருப்பது பெருமைப்படத்தக்கது.

இந்திய அணிக்கு கிடைத்த 69 பதக்கங்களில் தடகளத்தில் மட்டும் 7 தங்கம் உள்ளிட்ட 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் ஹாக்கி அணி தென் கொரியா, சீனாவை வீழ்த்தியது. ஆனால் இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்த முடியாவிட்டாலும் 2020ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த அணி ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்தம், குத்துச் சண்டை போட்டிகளிலும் முயன்றிருந்தால் இன்னும் அதிக பதக்கங்களை பெற்றிருக்க முடியும்.பேட்மிண்டனில் கிடைத்துள்ள வெள்ளி அடுத்த முறை தங்கத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள் ஹாக்கி, கபடி அணிகள் தான் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வில்வித்தை, துடுப்பு படகு, டென்னிஸ் ஆகிய போட்டிகளில் எதிர்பார்த்தப்படி பதக்கங்கள் கிடைத்திருந்தால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கும். எனவே ஆசியப் போட்டியால் ஏற்பட்டுள்ள நம்பிக்கை ஒலிம்பிக்கில் நிச்சயம் எதிரொலிக்கும்.
Post date: 2018-09-09 10:10:07
Post date GMT: 2018-09-09 10:10:07

Post modified date: 2018-09-09 10:10:07
Post modified date GMT: 2018-09-09 10:10:07

Export date: Tue Mar 19 2:07:42 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com