மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35423
Export date: Sun Sep 23 21:45:41 2018 / +0000 GMT

கண்டிக்கப்பட வேண்டும்


கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த லூயி சோபியா கடந்த திங்கட்கிழமை விமானத்தில் பிஜேபி யை கண்டித்து எழுப்பிய கோஷம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் இவர் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்.

அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னை கடந்து சென்ற போது இவர் கையை உயர்த்தி கோஷம் எழுப்பியிருக்கிறார். இதை தமிழிசை கண்டு கொள்ளவில்லை. தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கியதும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த சோபியாவை பார்த்து விமானத்தில் நீங்கள் நடந்து கொண்டது சரிதானா? என்று தமிழிசை கேட்டுள்ளார்.

அதை தொடர்ந்து கருத்து சுதந்திரம், பேச்சுரிமை பற்றி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய ஆணையத்தில் தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சோபியாவை பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மறுநாளில் சோபியா மீதான ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப் பிரிவை ரத்து செய்து விட்டு அவரை நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் மகளுக்கு அறிவுரை கூறுங்கள் என்று சோபியாவின் தந்தையை மாஜிஸ்திரேட் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார்.

ஒரு கட்சியின் ஆட்சியை கண்டித்து மாற்றுக் கருத்துடையவர்கள் கோஷம் எழுப்புவது ஜனநாயகத்தில் வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு தலைவருக்கு முன்னால் அதுவும் பொதுமக்கள் பயணம் செய்யும் விமானத்தில் கோஷம் போடுவது ஏற்கத்தக்கது அல்ல. கீழே இறங்கிய பிறகும் தமிழிசை இதை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் இந்த பழக்கம் மேலும் பரவி விடும்.

பறக்கும் விமானங்களும், ஓடும் ரெயில்களும் போராட்டக் களங்களாக மாறி விடும். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் சோபியா அனுப்பிய குறுஞ் செய்தியில் தமிழிசையும் இதே விமானத்தில் தான் பயணிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அப்போதே கோஷம் போட வேண்டும் என்பதை அவர் தீர்மானித்து விட்டார். எனவே தான் அவருக்கு பின்னணியில் இருக்கும் அமைப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறார் தமிழிசை.தூண்டி விட்டது யாராக இருந்தாலும் பொது இடத்தில் பிறருக்கு இடையூறு செய்வதை விவாதத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்.
Post date: 2018-09-09 10:03:29
Post date GMT: 2018-09-09 10:03:29

Post modified date: 2018-09-09 10:03:29
Post modified date GMT: 2018-09-09 10:03:29

Export date: Sun Sep 23 21:45:41 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com