மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35397
Export date: Tue Mar 19 1:31:49 2019 / +0000 GMT

சோதனை மேல் சோதனை


தமிழ்நாட்டில் வருமானவரித் துறையும் சிபிஐயையும் மாறி மாறி சோதனைகளை நடத்தி வருகின்றன. இப்போதைய அமைச்சர், முன்னாள் அமைச்சர், இப்போதைய போலீஸ் டிஜிபி, முன்னாள் போலீஸ் ஆணையர் மற்றும் உணவு பாதுகாப்பு, கலால் வரி, சுங்கவரி, வணிகவரி ஆகியத் துறைகளின் அதிகாரிகளும் சிபிஐ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2016 டிசம்பரில் அப்போதைய தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் சோதனைக்கு உட்படுவது இதுவே முதல் தடவை எனக் கூறப்பட்டது. இப்போது பதவியில் இருக்கும் டிஜிபியின் இல்லத்தில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பதும் காவல் துறை வரலாற்றில் முதல் தடவை எனப்படுகிறது.

2013ம் ஆண்டிலேயே பொதுமக்களின் நலன் கருதி குட்கா, பான்பராக் போதை பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் பெயரளவில் தான் தடை. கடைகளுக்கு தாராளமாக இந்த பொருட்கள் விநியோகிக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதற்கெல்லாடும் ஏற்பாடு செய்தவர் பான்பராக் உரிமையாளர் மாதவராவ். தடையை மீறுவதற்கு யார், யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை இவர் மாதம் வாரியாக டைரிகளில் எழுதி வைத்துள்ளார்.

இது வெறும் டைரி என்று சொல்ல முடியாது. ஏனெனில் மாதவராவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடத்திய விசாரணை அடிப்படையில் தான் செப்டம்பர் 5, 6 ஆம் தேதிகளில் சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது. இந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலை உரிமையாளர் மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அதிகாரிகள், இடைத் தரகர்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை இன்னும் தொடரும் என சிபிஐ வட்டாரம் தெரிவிக்கிறது. மணல் கொள்ளை, நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல், முட்டை கொள்முதல் டெண்டரில் முறைகேடு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ‘யார் தவறு செய்தாலும் தப்பிக்க முடியாது. தண்டனை நிச்சயம்' என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருக்கிறார். ஆனால் சோதனைக்கு மேல் சோதனை நடந்து கொண்டே இருப்பதை
சாதாரணமாக கருத முடியாது.
Post date: 2018-09-09 09:42:14
Post date GMT: 2018-09-09 09:42:14

Post modified date: 2018-09-09 09:42:14
Post modified date GMT: 2018-09-09 09:42:14

Export date: Tue Mar 19 1:31:49 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com