Home » Flash News » சென்னையில் 2000 இடங்களில் சிலைகள் விநாயகர்

சென்னையில் 2000 இடங்களில் சிலைகள் விநாயகர்

சென்னை, செப்.9:சென்னையில் கடந்த ஆண்டைப் போலவே 2000 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 13.9.2018 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் விநாயகர் சிலை நிறுவுவது குறித்தும் விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைப்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் விநாயகர் சிலை வைத்து வழிபடும் அமைப்பினர் பங்கேற்ற கலாந்தாய்வு கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

போலீஸ் கமிஷனர் அ.கா.விசுவநாதன் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூடுதல் ஆணையாளர்கள் மகேஷ்குமார் அகர்வால், ஆர்.தினகரன், இணை ஆணையாளர்கள் டி.எஸ்.அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, .ஆர்.சுதாகர், சி.மகேஸ்வரி,நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில், விநாயகர் சிலைகள் வைப்பதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், தமிழக அரசின் ஆணைகள்படியும், விதிகள் கடைபிடிக்க வேண்டும் எனவும், காவல்துறை அனுமதிக்கப்பட்ட தினங்களில் அமைதியான முறையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
வழிபாட்டிற்காக விநாயகர் சிலைகளை வைக்கும் அமைப்பினர் நேற்று மாலைக்குள் சென்னை மாநகர காவல்துறையிடம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சுமார் 2000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. அனுமதி பெற்று விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. சிலைகள் கடந்த ஆண்டு எந்த இடங்களில் கடலில் கரைக்கப்பட்டதோ அதே இடங்களில் இந்த ஆண்டும் கரைக்கவும், ஊர்வலப்பாதையும் கடந்த ஆண்களில் எந்த பாதைகள் அனுமதிக்கப்பட்டதோ அதே பாதைகள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பதற்கு வரும் 13-ம் தேதி முதல் 17-ந் தேதி வரை போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசி மேடு, கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலைகளை கரைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க முடிவு செய்து இருப்பதாக கூறியுள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*