Home » Flash News » விலை உயர்வு¦எதிர்க்கட்சிகள் நாளை பந்த்

விலை உயர்வு¦எதிர்க்கட்சிகள் நாளை பந்த்

சென்னை, செப்.9:பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய அளவில் நாளை எதிர்கட்சிகள் சார்பில் பாரத் பந்த் நடைபெறுகிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரித்து 83.66 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் மற்றும் லாரி வாடகை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது.

தனியார் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படவுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 10-ந் தேதி பாரத் பந்த் நடத்துவதற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நேற்று சத்தியமூர்த்தி பவனில் அனைத் துகட்சி கூட்டத்தை நடத்தி பந்த் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பேரவை ஆகிய இரு சங்கத்தினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பந்த் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். இன்று மாலை 4 மணிக்கு பிறகு வணிகர்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்பதால் தமிழகத்தில் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது. இரு வணிக சங்கங்களும் ஆதரவு தெரிவித்து இருப்பதால் கடைகளும் அடைக்கப்படும் என தெரிகிறது.

முழு அடைப்பு போராட்டத்தை யொட்டி அனைத்து பேருந்து டெப் போக்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதிகாலையில் டெப்போக்கள் முன்பு மறியல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை கண்டித்து பாம்பன் பகுதி மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினை அடுத்து விசை படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*