Home » Flash News » அப்பல்லோ மருத்துவமனை செயல் அதிகாரி பரபரப்பு தகவல்

அப்பல்லோ மருத்துவமனை செயல் அதிகாரி பரபரப்பு தகவல்

சென்னை, செப்.8: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது கண்காணிப்பு கேமராக்கள் அரசு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவ்வப்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாக விசாரணை கமிஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி வேண்டுகோள் விடுத்த அதிகாரியின் பெயரை ஒரு வாரத்துக்குள் அளிக்குமாறு விசாரணை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து  விசாரணை நடத்தி வரும்
ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் நேற்று சாட்சியம் அளித்தார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது மருத்துவமனை கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட்டு வந்ததாக அவர் கூறினார். ஆனால் சில சமயங்களில் ஒரு அரசு அதிகாரியின் வேண்டுகோளுக்கு ஏற்ப கண்காணிப்பு கேமராக்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். ஜெயலலிதா மருத்துவ பரிசோதனைக்காக ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றுவது போன்ற சமயங்களில் அரசு அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க கண்காணிப்பு கேமராக்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது என்றார்.
எந்த அதிகாரி அவ்வாறு கண்காணிப்பு கேமராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யச் சொன்னது என்று ஒரு வாரகாலத்துக்குள் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று
நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்யும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.  இதனிடையே விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இம்மாதம் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். வரும் அக்டோபர் 24-ல் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இறுதி கட்ட விசாரணைக்கு யார் யாரை அழைப்பது என இப்போதே தீர்மானித்துவிட்டதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஆகியோரை விசாரணைக்கு அழைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆணைய வட்டாரம் கூறுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*