மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் வெகுமதி ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாகவும், முதலமைச்சரின் பதக்கத்துடன் வழங்கப்படும் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாகவும் இனம் வாரியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
சட்டமன்றத்தில் காவல் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
முதலமைச்சரின் வெகுமதியுடன் மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் தொகை காவல்துணை கண்காணிப்பாளர்களுக்கு ரூ. 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்படும். இதே தொகை சார்பு ஆய்வாளர் முதல் காவல் ஆய்வாளர் வரை ரூ 6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாகவும், 2-ம் நிலை காவலர் முதல் தலைமை காவலர் வரை ரூ. 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாகவும் உயர்த்தப்படும். இதற்காக ரூ.9 லட்சம் செலவிடப்படும்.
சிறப்பு சேவையில் சிறந்து விளங்குவோருக்கு முதலமைச்சரின் வெகுமதியுடன் கூடிய ரொக்கத்தொகையை இனம் 1-ல் உள்ளவர்களுக்கு ரூ 2 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாகவும், இனம் 2-ல் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும், இனம் 3-ல் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்படும். இதற்காக ரூ.1.2 லட்சம் கூடுதலாக செலவிடப்படும்.
சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை தண்டிக்க மின் ரசீது முறை ரூ.6.42 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும்.
காவல்துறையினருக்கான சைபர் அரங்கம் ரூ.3.71 கோடி செலவில் உருவாக்கப்படும்.
சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில் காவலர் சிறப்பு அங்காடி ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
பட்டாபிராம் காவல்நிலையம், ஐஸ் ஹவுசிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையம், கள்ளக்குறிச்சி காவல்நிலையம் உள்ளிட்ட 11 காவல்நிலையங்களுக்கு ரூ.11.37 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
அரக்கோணம், வாணியம்பாடி, திருநெல்வேலி உள்ளிட்ட 7 காவல் துணை கண்காணிப்பாளர் முகாம்களுக்கு ரூ.4.75 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
கலவரத்தின் போது காவலர்களின் பாதுகாப்பிற்காக உடற்பாதுகாப்பு கவசம் போன்ற சாதனங்கள் ரூ.5 கோடி மதிப்பில் வாங்கப்படும்.
100 காவல்நிலையங்களில் இணைய வசதியுடன் கூடிய உட்சுற்று கண்காணிப்பு சாதனங்கள் ரூ.2.50 கோடி செலவில் நிறுவப்படும்.
போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த இரண்டு மீட்பு வேன்கள் ரூ.54.40 லட்சம் செலவில் வாங்கப்படும்.
சிறை கைதிகள் வழிக்காவல் பணிக்காக 3 வேன்கள் ரூ.39 லட்சம் செலவில் வாங்கப்படும்.
அதிரடிப்படை வீரர்களுக்கு குண்டு துளைக்காத பொதியுறைகள் ரூ.13 லட்சம் செலவில் வாங்கப்படும்.
தீயணைப்பு படை வீரர்களுக்கு பணியின் போது ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ நிதி உருவாக்கப்படும்.
தீயணைப்பு படை வீரர்களுக்கு மாத இடர்படி உதவி மாவட்ட அலுவலர் வரையிலான பணியாளர்களுக்கு ரூ.400-லிருந்து ரூ.800 ஆகவும், மாவட்ட அலுவலர்களுக்கு ரூ.450-லிருந்து ரூ.900 ஆகவும் உயர்த்தப்படும்.
சென்னை அசோக் நகர் தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இங்கு தீயணைப்போர் தங்கும் அறைகள் கொண்ட கட்டிடம் கட்ட ரூ.4 கோடியே 28 லட்சம் செலவிடப்படும்.காவல் நிலையத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை நிலையத்தின் தரத்திற்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும்.இவை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டார்.