This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Wed Dec 12 0:39:12 2018 / +0000 GMT

கோலி, ரவி சாஸ்திரி மீது இந்திய வீரர்கள் அதிருப்தி


மும்பை, செப். 7: அணி வீரர்கள் தேர்வில் அடிக்கடி மாற்றம் செய்வதால் கேப்டன் விராத் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது இந்திய வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், அணிக்குள்ளேயே இவர்கள் இருவருக்கும் எதிர்ப்புகள் வலுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவி சாஸ்திரி பயிற்சியாளரான பிறகு, வெளிநாடுகளில் நடக்கும் ஆட்டங்களில் இந்திய அணி சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. தற்போது இங்கிலாந்திலும் தொடரை இழந்துள்ளது. போட்டிக்கு போட்டி அணியில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான மாற்றங்களும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

ரவி சாஸ்திரி மீது கங்குலி, சேவாக் போன்ற முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இதேபோல், கேப்டன் விராத் கோலி தலைமையில் சமீபத்தில் களமிறங்கிய 38 போட்டிகளிலும் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டது, இந்திய வீரர்கள் இடையே சளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்திவந்த நிலையில், கோலி மற்றும் ரவிசாஸ்திரிக்கு தற்போது, அணிக்குள்ளேயே ஆப்பு ரெடியாக வருகிறதாம்.

இது தொடர்பாக, ஆங்கில ஊடகம் ஒன்று வீரர்களின் பெயர்களை குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோலி நல்ல மனிதர் தான். வீரர்களிடமிருந்து சிறந்த பங்களிப்பை எதிர்நோக்குகிறார். அதற்காக தொடர்ந்து அணியில் மாற்றங்களை செய்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அப்படி செய்வதால் ஒரு வீரருக்கு அவரது திறமை மீதே சந்தேகம் எழுகிறது. நாங்கள் எங்களது திறமை மீதே சந்தேகப்படுவது தவறுதான் என்றாலும் நாங்களும் மனிதர்கள்தானே என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலியின் செயல்பாடுகள் பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளாவதற்கு அப்பாற்பட்டு, அணி வீரர்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
Post date: 2018-09-07 09:41:33
Post date GMT: 2018-09-07 09:41:33
Post modified date: 2018-09-07 09:41:33
Post modified date GMT: 2018-09-07 09:41:33
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com