சென்னை, செப்.7:திமுகவில் என்னை சேர்க்காவிட்டால், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு 4-வது இடமே கிடைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
ஆங்கில தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
திருமங்கலம் பார்முலா என்றால் ஏதோ பணத்தை கொடுத்து ஜெயித்த தேர்தல் என்கிற குற்றச்சாட்டு சொல்கிறார்கள். ஆனால் 1962 இல் இருந்து கருணாநிதி எப்படி தேர்தல் பணியாற்றுகிறார் என்பதை நான் கவனித்து வந்து இருக்கிறேன்.
வகுப்பறையில் ஆசிரியர் எப்படி மாணவர்களை கையாளுவாரோ அப்படி தொண்டர்களிடம் நடந்து கொள்வார். கருணாநிதிக்கு கொலை மிரட்டல் வந்தபோது கூட இரவு, பகல் பாராமல் அவர் பணியாற்றுவார். நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திற்கு செல்வார். அங்கே தொண்டர்கள் தூங்குகிறார்களா? வேலை பார்க்கிறார்களா என்பதை நேரடியாக அவர் ஆய்வு செய்வார். தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களை தீவிரமாக பணியாற்ற வைப்பார்.
அதே பாணியைத்தான் நானும் திருமங்கலத்தில் கையாண்டேன். அங்கு கிடைத்தது நேர்மையான வெற்றி.நான் இல்லாமல் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவால் வெல்லவே முடியாது. திருப்பரங்குன்றத்தில் நான்காவது இடத்திற்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பேரணி இப்போதுதான் முடிந்துள்ளது. உடனே எதையும் செய்ய முடியாது. நான் இன்னும் பல பேரிடம் கலந்து பேச வேண்டியுள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் செய்ய முடியும். நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரி அடுத்தவன் பேச்சை கேட்டு செய்ய முடியாது. என்னை நம்பி உள்ளவர்களுக்கு, கடைசிவரை நிச்சயம் பாதுகாவலாக இருப்பேன்.
என்னை நம்பி பேரணிக்கு வந்தார்களுக்காக நல்ல முடிவை எடுப்பேன். பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. காத்திருந்து பார்ப்போம். திமுகவில் என்னை
சேர்க்காவிட்டால், நாங்களும் எங்கள் முடிவை எடுப்போம்.
ரஜினிகாந்துக்கு திமுகவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவர்களெல்லாம் அதில் சேர்ந்துவிடுவார்கள்.
இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.