Home » Flash News » 3 மாணவர்கள் கைது: பரபரப்பு வாக்குமூலம்

3 மாணவர்கள் கைது: பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, செப். 7: சென்னை வேளச்சேரி பறக்கும் ரெயில் தண்டவாளத்தில், சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வேளச்சேரி பறக்கும் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 31-ம் தேதி மற்றும் செப்டம்பர் 4-ம் தேதி என இரண்டு முறை சிமெண்ட் சிலாப்கள் வைக்கப்பட்டது. இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை கிளப்பியது. ஆனால், முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது ரெயிலை கவிழ்ப்பதற்கான சதி செயலா? என போலீசாரிடையே சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து, ஏடிஜிபி சைலேந்திர பாபு மேற்பார்வையில், எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பெருங்குடி மற்றும் குன்றத்தூரை சேர்ந்தவர்கள் என்றும், ஐ.டி.ஐ. மாணவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: சிமெண்ட் சிலாப்பில் உள்ள கம்பிகளை தனியே எடுத்து, அவற்றை பழைய இரும்பு கடையில் (காயலாங்கடை) போட்டுவிட்டு, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தங்களது சொந்த செலவினங்களுக்காக பயன்படுத்துவோம். அதேபோன்று, இந்தமுறை சிமெண்ட் சிலாப்களில் இருந்து கம்பிகளை தனியே பிரிப்பது கடினமாக இருந்ததால், ரெயில் தண்டவாளத்தில் வைத்துவிட்டு சென்றோம். சிமெண்ட் சிலாப் மீது ரெயில் ஏறி சுக்கு நூறாக உடைந்தவுடன், அதில் உள்ள கம்பிகளை கொண்டு போய், பழைய இரும்பு கடையில் கொடுத்து பணம் பெற்றுக்
கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கைதான 3 பேரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பதால், அவர்கள் அனைவரையும் கெல்லீஸ் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*