சென்னை,செப்.7:திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றை தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் சீனிவேல் வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக 2017-ம் ஆண்டு மரணம் அடைந்ததை தொடந்து, அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில் திடீர் மாரடைப்பை ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியில் 2வது முறையாக இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே போன்று 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்லி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி திமுக தலைவர் கருணாநிதியும், உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 7-ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதியிலும் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தெலுங்கானா சட்டசபையும் நேற்று முன்தினம் கலைக்கப்பட்ட, அதற்கான கடிதத்தை அம்மாநில முதல்வரிடம் சந்திரசேகர ராவ் அளித்தார். இந்த மாநிலத்திற்கான சட்டசபை தேர்தலும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 3 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் எனதெரிகிறது.
இந்நிலையில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டியது கட்டாயம். அந்த வகையில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் 1 மாதத்திற்குள் முடிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ , தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியையும் விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கேட்டு கொண்டுள்ளார்.
இந்த பணிகள் முடிந்தவுடன் அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 4 மாநில தேர்தலுடன் திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிகிறது.