Home » குற்றம் » டி.கே.ராஜேந்திரன் நீக்கப்படுவாரா?

டி.கே.ராஜேந்திரன் நீக்கப்படுவாரா?

சென்னை, செப்.6: சிபிஐ சோதனைக்கு உள்ளான டிஜிபி ராஜேந்திரன் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

குட்கா விவகாரம் தொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரனின் முகப்பேர் இல்லம் மற்றும் கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். குட்கா ஏஜெண்ட் மாதவராவிடம் நடத்திய சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

தமிழக காவல்துறை வரலாற்றில் டிஜிபி இல்லத்தில் இதுபோன்ற சோதனை நடந்தது இல்லை என்பதால் அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில் டிஜிபி ராஜேந்திரன் நேற்றிரவு 9 மணியளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று எடப்பாடியை சந்தித்தார். நடந்தது என்ன? என்பது குறித்து அவர் முதல்வரிடம் விளக்கியதாக தெரிகிறது.

முதல்வரை சந்திப்பதற்கு டிஜிபி ராஜேந்திரன் தனது சொந்த காரிலேயே சென்றார். மேலும் அரை மணி நேரம் காத்திருந்த பிறகே சந்தித்தார். இதை வைத்து அவர் ராஜினாமா செய்ய முன்வந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

டிஜிபி ராஜேந்திரன் 2017 ஜூலையில் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு கடைசி நேரத்தில் 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. அவரது பதவி காலம் வரும் ஜூன் மாதம் வரை உள்ளது.

1984 பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராஜேந்திரன் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 3 முதலமைச்சர்களின் கீழ் பணியாற்றி இருக்கிறார்.

கும்பகோணத்தில் அவர் ஏஎஸ்பியாக இருந்தபோது கும்பகோணத்தில் நடைபெற்ற கும்பமேளா நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி போலீஸ் கமிஷனராக பணியாற்றிய காலத்தில் மாஞ்சோலை எஸ்டேட் ஊழியர்கள் நடத்திய பேரணியில் தடியடி நடத்தியபோது 17 பேர் தாமிர பரணி ஆற்றில் மூழ்கி உயிரிழக்க நேரிட்டது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே அவர் மீது குட்கா ஊழல் புகார் கூறப்பட்டது. பின்னர் யுபிஎஸ்இ இந்த குற்றச்சாட்டை நிராகரித்ததை தொடர்ந்து டிஜிபி பதவிக்கு நியமிக்கப் பட்டார்.

ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்ற போதும் டிஜிபியாக பணியாற்றி உள்ளார். இப்போது அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில் புதிய டிஜிபி பதவிக்காக டிஜிபிக்கள் கே.பி.மகேந்திரன், சங்காராம் ஜாங்கிட், ஜெ.கே.திரிபாதி மற்றும் சி.கே.காந்திராஜன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

ஆனால் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என தெரிகிறது. சிபிஐ தனது நடவடிக்கைகளை முடித்து அரசுக்கு அறிக்கை கொடுத்து குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வரை அவர் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என முடிவெடுத்து இருப்பதாக அரசின் மேலிட வட்டார தகவல்கள் கூறுகிறது.

ஏனெனில் 2016 டிசம்பரில் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அதன் பின்னர் ராமமோகன்ராவ் மாற்றப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான புகார்களை நிருபிக்க முடியவில்லை என்பதை கருத்தில் கொண்டு இப்போதைய டிஜிபி மீது நடவடிக்கை எடுப்பது தவறான முன்மாதிரியாக இருக்கும் என கருதுவதாக கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*