Home » Flash News » நளினி உள்பட 7 பேர் விடுதலை: தமிழக அரசு முடிவு செய்யலாம்

நளினி உள்பட 7 பேர் விடுதலை: தமிழக அரசு முடிவு செய்யலாம்

புதுடெல்லி, செப்.6:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2014 ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1991 மே 21 ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டுக்கு பலியானார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. குற்றம்சாட்டபட்ட 41 பேரில் 12 பேர் இறந்துவிட்டனர். 26 பேருக்கு மரணதண்டனை விதித்து 1998 ல் தனி தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பின்னர் தொடரபட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினிக்கு வழங்கபட்ட தூக்கு தண்டணையை உறுதி செய்தது. மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

2000 ம் ஆண்டு ஏப்ரலில் நளினிக்கு விதிக்கபட்ட தூக்குதண்டனையை தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆயுள் தண்டனையாக தமிழக கவர்னர் குறைத்தார். 2014 ல் பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யபட்டபோது சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டணையாக குறைக்கபட்டது.

இவர்கள் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகள் வரை கால தாமதம் எடுக்கபட்டதால் இந்த தீர்ப்பை வழங்குவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டபட்ட நளினி, சாந்தன், முருகன் ,பேரறிவாளன், ராபர்ட் பயாஸ் ,ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்தார்.

அமைச்சரவைவை கூட்டி எடுக்கபட்ட இந்த முடிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பபட்டது. 3 நாட்களில் முடிவு தெரிவிக்காவிட்டால் தமிழக அரசே முடிவெடுக்கும் என்று கடிதத்தில் மேலும் தெரிவிக்கபட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. அதில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விசயத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 7 பேரையும் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*