Home » அரசியல் » தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, செப். 5:இந்திய ஜனநாயகத்துக்கே உலை வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி, மாணவி சோபியா கருத்துத் தெரிவித்தது அவரது ஜனநாயக உரிமை ஆகும். அதற்காக அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது கண்டனத்துக்கு உரியதாகும்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் கல்வி கற்று முன்னேறிய மாணவி சோபியா டெல்லியில் இளநிலை பட்டம் பெற்று, பின்னர் ஜெர்மனியில் எம்.எஸ்.சி., இயற்பியல் பட்டம் பெற்று, கனடாவில் எம்.எஸ்.சி., கணிதம் படித்து முடித்து தற்போது கனடா மாண்ட்டிரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வருகின்றார். அவரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்ததும், கீழமை நீதிமன்றம் ரிமாண்ட் செய்ததும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது நீதிமன்றம் அவரை பினையில் விடுதலை செய்துள்ளது. ஆனால் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டைக் கைப்பற்றி, முடக்க முயல்வதும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அவர் கனடாவில் கல்வியைத் தொடரத் தடையாக அமையும்; பெரும் அநீதிக்கு வழிவகுக்கும் என்பதால், தமிழக அரசு உடனடியாக மாணவி சோபியா மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் நான் வழக்கைத் திரும்பப் பெறமாட்டேன் என்று கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*