பெங்களூரு, செப்.5: கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஜி.பரமேஸ்வராவின் உடையையும், காலணியையும் அவரது மெய்க்காப் பாளர் துடைக்கும் காட்சி வைரலாக வலம் வந்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மேம்பாட்டு அமைச்சராகவும் உள்ள பரமேஸ்வரா மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அப் போது மழையால் தேங்கியிருந்த தண்ணீரால் அவரது காலணியும், வெள்ளை நிற சட்டையும் அழுக்கானது. அதை பரமேஸ்வராவின் மெய்க் காப்பாளர் தண்ணீரை எடுத்து துடைத்த காட்சியே வைரலானது.
மெய்க்காப்பாளரின் இந்த செயலை தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாத பரமேஸ்வரா, அவர் சுத்தப்படுத்தும் வரை நின்று கொண்டிருந்தார். இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வரா, ‘சட்டை அழுக்கானதை பார்த்த மெய்க்காப்பாளர் அதை துடைத்தார். இந்த சின்ன விஷயத்தை சர்வதேச பிரச்சனையாக மாற்றி வெளியிட்ட உங்களுக்கு நன்றி’ என கிண்டலாக கூறியிருப்பது கண்டனக்கனைகளுக்கு காரணமாகி உள்ளது.
இதனை கண்டித்துள்ள கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரும், பிஜேபி தலைவர் களில் ஒருவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார். இதற்கு துணை முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
அண்மையில் கர்நாடக பொதுப் பணித்துறை அமைச்சரும், முதலமைச்சர் குமாரசாமியின் சகோத ரருமான ரேவண்ணா, வெள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், துணை முதலமைச்சரின் செயல் சர்ச்சைக்கிடமாகி உள்ளது.பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த ரேவண்ணாவும் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக தனது செயலை நியாயப்படுத்தி பேசினார். பெண்களும் குழந்தைகளும் தொலைவில் நின்றதால் தான் பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி வீசியதாக அவர் தெரிவித்திருந்தார்.