Home » Flash News » தமிழகத்தில் சுனாமி ஒத்திகை

தமிழகத்தில் சுனாமி ஒத்திகை

சென்னை, செப்.5:சர்வதேச அளவில் மேற்கொள்ளப் படும் சுனாமி ஒத்திகை நடவடிக்கை இன்று சென்னை உள்பட தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களில் நடை பெற்றது.

வருங்காலங்களில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும், அரசு துரிதமாக மேற்கொண்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இயற்கை பேரிடர் ஏற்படும் போது அந்த ஆபத்தான சூழ்நிலையில் இருந்து நம்மை பாதுகாக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்பால் பல மக்கள் உயிரிழந்தனர். அந்த சூழ்நிலையில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் அது போன்ற சம்பவத்தில் இருந்து மக்களை முன்பாக பாதுகாக்க முடியவில்லை. இருந்த போதிலும் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா சுனாமி பாதித்த பகுதிகளை நேரில் சென்று நிவாரண பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதை உலக நாடுகள் அனைத்துமே பாராட்டின. அந்தவகையில் ஆண்டு தோறும் சுனாமி வரும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பது தொடர்பான பயிற்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்ட வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் இன்று காலை 8.30 மணி முதல் இப்பயிற்சியானது இந்திய கடல்சார் தகவல் மையத்தில் உள்ள இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பின் மூலம் அனைத்து கிழக்கு கடலோர பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் இந்திய பெருங்கடல் அலை-2018 என்ற பெயரில் நடத்தப்படுகிறது. மாதிரி பயிற்சியானது இந்திய பெருங்கடலை ஒட்டி உள்ள இந்தியா உள்பட 24 நாடுகளில் யுனெஸ்கோ என்ற ஐக்கிய நாடுகளின் அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்று நடைபெறும் சுனாமி எச்சரிக்கை நடவடிக்கை குறித்த பயிற்சியானது ஒரு மாதிரி பயிற்சி மட்டுமே ஆகும். ஆகவே இது குறித்து பொது மக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை.

தமிழக கடலோர மாவட்டங்களில் நடைபெறும் இந்த முன் மாதிரி பயிற்சி 27 கிராமங்களை எடுத்து கொண்டு அதில் 5054 மக்கள் பங்கேற்கின்றனர். இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இயற்கை பேரிடர் ஏற்படும் போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த பாதிப்பில் இருந்து எளிதாக மக்களை பாதுகாக்க முடியும். வரும் காலங்களில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு பணிகளை தற்போது தொடங்கி விட்டது.

அந்த வகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநிலங்களில் நானே நேரில் சென்று வடகிழக்கு பருவமழை முன்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளேன். அந்த வகையில் உரிய அறிவுரைகள் அந்தந்த மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*