Home » அரசியல் » விரைவில் புதிய கட்சி துவங்க அழகிரி முடிவு?

விரைவில் புதிய கட்சி துவங்க அழகிரி முடிவு?

சென்னை, செப்.5: அறிவித்தபடி அமைதிப் பேரணியை நடத்திக் காட்டிய மு.க.அழகிரி, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கிய ஸ்டாலினால் பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்க முடியுமா? என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவில் இருந்து நீக்கி வைக்கப் பட்டுள்ள மு.க.அழகிரி, கட்சியில் மீண்டும் சேர மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. இதனால் தனது பலத்தை காட்டுவதற்காக, மறைந்த தனது தந்தை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பேரணிக்கு நாள் குறித்து இருந்தார். பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி, அமைதிப் பேரணி இன்று காலை 10 மணிக்கு அண்ணா சிலையிலிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டம் குறைவாக இருந்ததால் பேரணி, 11.30 மணி அளவில் தொடங்கியது. மேலும் பேரணிக்கான தூரமும் குறைக்கப்பட்டு திருவல்லிக் கேணி காவல் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.

திறந்த ஜீப்பில் மு.க.அழகிரி, அவரது மகள் கயல்விழி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் ஆதரவாளர்கள் வந்தனர்.
மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங் களிலிருந்து வாகனங்கள் மூலம் திரண்ட அழகிரியின் ஆதரவாளர்கள், திமுக கொடிகள், கருணாநிதி, அழகிரி படத்துடன் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியையொட்டி சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பேரணியின் முடிவில் மு.க.அழகிரி, அறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே இந்த பேரணி நடைபெற்றதாக கூறினார்.
பேரணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த அழகிரி, பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினருக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

விமான நிலையத்தில் அழகிரியை வரவேற்ற கட்சி நிர்வாகி நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் நீக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, அமைதிப் பேரணி அமோக வெற்றி என அழகிரியின் மகன் தயாநிதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கூறியபடி பேரணியை நடத்திக்காட்டிய அழகிரி, அடுத்தக் கட்ட நடவடிக்கையாக புதிய கட்சி தொடங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னர் இது பற்றிய முடிவை விரைவில் அறிவிப்பார் என்று அவர்கள் கூறினர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*