ஹைதராபாத், செப்.4: தென் மாநிலங்களில் பிஜேபியின் அடுத்த குறி தெலுங்கானா என்றும், இம்மாநில சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை வெற்றி பெற செய்யும் பொறுப்பை தாம் ஏற்றிருப்பதாகவும் அமித்ஷா கூறியுள்ளார்.
பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில பிஜேபி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த மாநிலத்தில் பிஜேபி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. அசாம் மற்றும் அரியானாவை போல் தெலுங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்றுவோம்.
தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சிக்கும், பிஜேபிக்கும் இடையேயான உறவு சில வரையறைக்குள் உட்பட்டது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை போன்றதே இது ஆகும். தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டோம்.
அரசு மட்டத்திலேயே நாங்கள் தொடர்பு வைத்திருக்கிறோம். தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை வெற்றிபெறச் செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 12 அல்லது 15 ல் மகபூப் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்குபெறுவார்கள் அதற்கு முன்னதாக பிஜேபியின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் டெல்லியில் நடைபெறும்.
இதில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் மட்டுமே விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசியதாக தெலுங்கானா மாநில பிஜேபி தலைவர் எல்.லட்சுமணன் கூறியுள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகளிலும் பிஜேபி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தி தேசிய தலைவர்களை அழைத்து பிரச்சாரம் செய்ய வைப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.