Home » குற்றம் » எடப்பாடி மீதான புகார்: விசாரணை முடிந்தது

எடப்பாடி மீதான புகார்: விசாரணை முடிந்தது

சென்னை, செப்.4: நெடுஞ்சாலை பணிகள் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடுத்த புகார் மீதான பூர்வாங்க விசாரணை முடிந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரின் பார்வைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் நடந்த முறைகேடு தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .

அதில், ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசி பாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் உள்பட ஐந்து நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை, முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி. சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை ஒதுக்கியதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி உள்ளார். அதன் மூலம் சட்ட விரோத ஆதாயம் அடைந்துள்ளார்.

பொது ஊழியர் என்ற முறையில், முதல்வரின் இந்த செயலானது லஞ்ச் ஒழிப்பு சட்டத்தின்படி குற்றமாகும். எனவே, அவருக்கு எதிராக கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புகார் குறித்து விசாதித்து வரும் விசாரணை அதிகாரி தரப்பில், மனுதாரரின் புகார் குறித்த விசாரணை முடிந்து விட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரின் பார்வைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது, லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனர் எடுக்கும் முடிவை அடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணயை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தள்ளி வைத்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*