Home » அரசியல் » அழகிரி பேரணி தேறுமா? பிசுபிசுக்குமா?

அழகிரி பேரணி தேறுமா? பிசுபிசுக்குமா?

சென்னை, செப்.4: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மு.க.அழகிரி நாளை நடத்த உள்ள அமைதிப் பேரணி, வெற்றி பெறுமா அல்லது பிசுபிசுக்குமா என்பது நாளை வெட்ட வெளிச்சமாகி விடும்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

கருணாநிதி இருந்த வரை அமைதி காத்து வந்த மு.க.அழகிரி, அவரது மறைவுக்கு பின்னர், திமுகவில் மீண்டும் சேர்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக அழகிரி கூறினார். ஆனால், அண்மையில் மு.க.ஸ்டாலினை திமுக தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக நடந்த கட்சியின் பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் ஒரே குரலில் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தன்னை கட்சியில் சேர்க்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அழகிரி பகிரங்க மிரட்டல் விடுத்தார். அடுத்த சில நாட்களிலேயே ஸ்டாலினின் தலைமையை ஏற்கத் தயார்; கட்சியில் சேர்த்தால் தீவிரமாக பணியாற்றத் தயார் என்று முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி அழகிரி கெஞ்சும் பாணியில் கூறினார்.

அழகிரியை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்து வந்த கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த சிலரும் அவரை கைவிட்டதை அடுத்து அவர் தனித்து விடப்பட்டார். இதனிடையே அமைதிப் பேரணி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மதுரையில் அவர் அழைப்பு விடுத்த கூட்டத்திற்கு எந்த ஆதரவும் இல்லாததால், அந்த கூட்டத்தை அழகிரி ரத்து செய்தார்.

இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பேரணி நடக்கும் என்றும், அதில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அழகிரியின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

கட்சியில் ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள் மற்றும் திமுக அனுதாபிகள் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள் என அழகிரி தரப்பு எதிர்பார்க்கிறது. இதற்கிடையே அழகிரியை சென்னை விமான நிலையத்தில் நேற்று வரவேற்ற வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் மு.ரவி என்பவர் கட்சியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளார்.

அழகிரியின் பேரணியில் திமுகவினர் கலந்து கொள்ளக்கூடாது என்பதை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அழகிரிக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்று திமுகவினர் கூறிவரும் நிலையில், அறிவித்தபடி கூட்டத்தை அழகிரி கூட்டிக்காட்டி விடுவாரோ என்ற பதற்றமும் அவர்களிடையே இருப்பதாக தெரிகிறது.

மொத்தத்தில் அழகிரியின் இந்த பேரணி வெற்றி பெறுமா அல்லது பிசுபிசுக்குமா என்பது நாளை தெரிந்து விடும். இந்த நடவடிக்கையில் அழகிரி வெற்றி பெறுவதை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*