Home » விளையாட்டு » ஆசியப்போட்டி: சாதித்த இந்தியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஆசியப்போட்டி: சாதித்த இந்தியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி, செப். 3:  ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை தேடி தந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

18-வது ஆசிய விளையாட்டு திருவிழா, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. இந்தோனேஷியாவில் கடந்த 2 வார காலமாக நடந்த பல்வேறு விதமான போட்டிகளில் இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதில், 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் உட்பட மொத்தம் 69 பதக்கங்களை குவித்து, பதக்கப்பட்டியலில் இந்தியா 8-வது இடம் பிடித்தது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் பெற்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டிவிட்டரில் பதிவில், இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். 2018-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய வரலாறை உருவாக்கியுள்ளது.

இதில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளால் இந்தியா பெருமிதம் கொள்கிறது. போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பெற்றோர்கள், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாம்பியன்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

அதிக பதக்கங்கள் – அசாத்திய வெற்றி… ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா சார்பில் இந்தாண்டு அதிக பதக்கங்கள் (69) குவித்து புதிய சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்னர், 2010-ம் ஆண்டு 65 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது.

இதேபோல், மற்றொரு சாதனையையும் இந்தியா சமன் செய்துள்ளது. ஆசிய போட்டி தொடங்கிய 1951-ம் ஆண்டு 15 தங்கப்பதக்கங்களை வென்றதுதான் அதிகபட்சமாக இருந்துவந்தது. அதன்பிறகு, தற்போதுதான் 15 தங்கப்பதக்கம் வென்று தனது முந்தைய சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*