சவுத்தாம்டன், செப். 3: ஆட்டத்தின் கடினமான சூழலில் எங்களை விட துணிச்சலாக செயல்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வசமானது என இந்தியா கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 2-1 என இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கிடையே, சவுத்தாம்டன் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து 3-1 என வென்று, தொடரையும் கைப்பற்றியது.
இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறுகையில், முந்தைய நாள் இரவில் இந்த டெஸ்டில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன்.
ஆனால், நாங்கள் விரும்பிய மாதிரி தொடக்கம் கிடைக்கவில்லை. பந்து வீச்சில் அவர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். எல்லா பெருமையும் இங்கிலாந்து வீரர்களையே சாரும். கடினமான சூழலில் எங்களை விட இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டனர். குறிப்பாக சாம் கர்ரனுக்கு வாழ்த்துகள். அவர் கடைசிக் கட்டத்தில் நின்று அதிக ரன்கள் சேர்த்தார். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர், என்றார்.