Home » Flash News » திருப்பதி கோவில் நகைகள் எங்கே? ஆந்திர அரசுக்கு நோட்டீஸ்

திருப்பதி கோவில் நகைகள் எங்கே? ஆந்திர அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி, செப்.3:திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர் வழங்கிய ஏராளமான தங்க ஆபரணங்கள் எங்கே உள்ளன என்று மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தலைமை அர்ச்சகராக இருந்த ரமணா தீட்சதலு என்பவர் திருமலை தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்கால நகைகள் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்திருந்தார். மேலும் தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே 65 வயதை தாண்டிய ரமணா தீட்சதலு, ஓய்வு பெற்றதாக கருதி பணியிலிருந்து நிறுத்தப்பட்டார்.

ஆனால் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்ததால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவர் மீது 100 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது. ரமணா தீட்சதலுவின் குற்றச்சாட்டுகளை மறுத்த தேவஸ்தானம், நூற்றாண்டுகளாக பெறப்பட்ட நகைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளது என்று தெரிவித்தது. இதற்கிடையே ஆந்திர மாநில துணை முதலமைச்சர் கிருஷ்ண மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், பணியில் இருந்து நீக்கப்பட்ட ரமணா தீட்சதலு அரசியலில் புகுந்து பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக தெரிவித்தார். இதில் திருப்பதி கோயிலின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று கூறிய அவர் இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

இதனிடையே 16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆட்சி செய்த மன்னர் கிருஷ்ண தேவராயர் ஏராளமான தங்க நகைகளை திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியதாக கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்ததை 2011-ம் ஆண்டு ஐதராபாத் தொல்லியல் துறை உறுதி செய்து அறிக்கையாக வெளியிட்டது.

இது பற்றி மத்திய தகவல் ஆணையத்தில் சமூக ஆர்வலர் வி.கே.எஸ்.ஆர். ஐயங்கார் என்பவர் மனு தாக்கல் செய்தார். திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட ஆபரணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், திருப்பதி கோயிலை வரலாற்று சின்னமாகவும், தேசிய நினைவு சின்னமாகவும் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய தகவல் ஆணையர், மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு இந்திய தொல்லியல் துறை, ஆந்திர மாநில அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.திருப்பதி கோயிலை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க பிரதமர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை என்ன என்றும் தகவல் ஆணையர் கேட்டுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*