Home » Flash News » தமிழக அரசு மீது ஸ்டாலின் தாக்கு

தமிழக அரசு மீது ஸ்டாலின் தாக்கு

திருச்சி, செப். 3:முதல்வர் கூறியபடி அணைகளுக்கு காய்ச்சல் வந்ததோ இல்லையோ ஆனால் அதிமுக அரசு தற்போது கோமா நிலையில் உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததால் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வீணாக சென்று கடலில் கலந்தது. மதகுகள் உடைந்த இடத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நடைபெற்று வரும்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு: -முக்கொம்பு அணையை சரியாக பராமரிக்காததே மதகுகள் உடைவதற்கு காரணமாகும். பராமரிப்பு சரியில்லாததால் தண்ணீர் அதிகமாக திறந்து விட்டபோது, மதகுகள் அடித்து செல்லப்பட்டன. தமிழகஅரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணமாகும். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால், மதகுகள் உடைவதை தடுத்து இருக்கலாம்,

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.கடந்த 24 ஆம் தேதி முதல்வர் அளித்த பேட்டியில் 4 நாட்களில் பணிகள் முடிவடையும் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது 40 சதவிகித பணிகள் தான் முடிந்துள்ளது.

காய்ச்சல் சொல்லாமல் வருகிறது. ஆனால் கமிஷனைப் பொருத்தவரை செல்லிக் கொண்டு வருகிறது அணைக்கு காய்ச்சல் வந்துள்ளது என சொன்னது போல அதிமுக அரசு கோமா நிலையில் உள்ளது.

தூர் வாரும் பணியில் ரூ.5 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. மணல் கொள்ளையால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.தூர்வாரும் பணியில் நடைபெற்ற ஊழல் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆட்சியில் முறையான விசாரணை நடைபெறாது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர் மேலாண்மை குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். தமிழகத்தில் உள்ள தூர் வாரும் பணிகளை குறித்து அறிக்கை கேட்டு இருக்கிறோம். ஆனால் முறையாக தகவல் தரவில்லை நாங்கள் பல தடவை சட்டமன்றத்தில் பேசியும் அதற்கு உரிய பதில் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தரபாண்டியன், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் மு. அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*