Home » Flash News » சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பரிதாப மரணம்

சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பரிதாப மரணம்

சேலம், செப்.1 சேலம் அருகே இன்று அதிகாலை இரண்டு சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தார்கள். 31 பேர் காயமடைந்தார்கள்.
சாலையில் நிறுத்தியிருந்த வேன் மீது தூக்க கலக்கத்தில் மோதாமல் தவிர்க்க பஸ்சை திருப்பிய போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து பாலக்காட்டிற்கும் சேலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கும் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்துகள் மாமாங்கம் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்து நடந்த தேசிய நெடுஞ் சாலையில் மலர்களை ஏற்றிச்செல்லும் வேன் ஒன்று பழுதடைந்து சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி  செல்லும் பஸ்சின் டிரைவர் அந்த வேனின் மோதாமல் தடுப்பதற்காக பஸ்சை வலது புறமாக திருப்பி யிருக்கிறார். அப்போது எதிர் திசையில் பெங்களூரில் இருந்து பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பாலக்காடு செல்லும் பஸ் கவிழ்ந்தது.

விபத்து நடந்த இடத்திலேயே எட்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு போலீஸ் கமிஷனர் சங்கர் விரைந்து வந்து மீட்பு பணிகளை ஈடுபட்டார். சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி  சென்று கொண்டிருந்த பேருந்து
சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வேனின் மீது மோதியதுடன் நடுவில் இருந்த தடுப்பு சுவரையும் உடைத்துக் கொண்டு சென்றது. அப்போது எதிரே வந்த பெங்களூரு – பாலக்காடு பேருந்து மீது மோதியதில் 8 பேர் உயிரிழந்தார்கள் என்று கமிஷனர் சங்கர் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார். 31 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல் நிலை சீராக உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

ஆரம்ப கட்ட விசாரணையில் சேலம் கிருஷ்ணகிரி பேருந்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியதாக தெரிய வந்துள்ளது என்று கலெக்டர் கூறினார். இரண்டு மூன்று முறை அவர் தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டியதாக அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த கணேஷ் என்ற பயணி கூறும் போது தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதால் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறினார்.

அவர் விபத்து நடந்த இடத்துக்கு பேருந்தை ஓட்டி வந்த போது சாலையோரமாக நின்று கொண்டிருந்த வேனை கவனிக்கவில்லை. திடீரென்று விழித்துக்கொண்டு பேருந்தை ஓட்டினார். அப்போது நிறுத்தியிருந்த வேனின் மீதும் மோதி, எதிரே வந்த பாலக்காடு பேருந்து மீதும் மோதியது என்றார்.
போலீசார் இந்த விபத்து குறித்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*