Home » Flash News » குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை

சென்னை, ஜூலை 7: தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.  சட்டப்பேரவையில் இன்று திமுக உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் குடிநீர் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
தீர்மானத்தில் பேசிய மா.சுப்பிரமணியன், கடலோர மாவட்டங்களில் கடல்நீரை குடி நீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மற்ற இடங்களில் உரிய வகையில் நீர்தேக்க தொட்டிகள் அமைத்து குடிநீர் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்று கேட்டு கொண்டார். இதே போல் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி பேசுகையில், தமிழகத்தில் நிலவும் குடி நீர் பற்றாக்குறையை விரிவாக எடுத்துரைத்தார். இதற்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-
தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க அரசு விருதுநகரில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 553 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 8 மாநகராட்சி 66 நகராட்சி, 324 பேரூராட்சி, 47,136 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் 4.2 கோடி மக்கள்  பயன்பெறும் வகையில் தினமும் 2073 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு தற்போது 1440 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட  ரூ. 121.18 கோடி செலவில் புதிய ஆழ்துளை கிணறு, நீர் உறிஞ்சி கிணறு அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறு, நீர் உறிஞ்சி கிணறு, நீர்சேகரிப்பு கிணறுகளை சுத்தப்படுத்துதல், சீரமைத்தல், மாற்று நீர்வழிகால்வாய் அமைத்தல், மின் மோட்டார்களை பழுதுநீக்கி மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மேலும் தேசிய ஊரக திட்டத்தின்  கீழ் இந்த ஆண்டு ரூ. 36.77 கோடி மதிப்பில் 600 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட குறைபாடுகளை நீக்க 642 பணிகள் ரூ.30.63 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மை வறட்சி திட்டத்தின் கீழ் 238 பணிகள் ரூ.20 கோடி செலவில் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ரூ.25 கோடி மதிப்பு 730 பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இதுவரை 2282 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 1915 பணிகள் முடிக்கப்பட்டு 96.22 எம்எல்டி நாளொன்றுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  எஞ்சிய பணிகள் ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மேலும் கூடுதலாக 27 எம்எல்டி குடிநீர் மக்களுக்கு வழங்கப்படும். சென்னையை பொறுத்தவரை  திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறுகள், நெய்வேலி, பரவனாறு, கெடிலம் ஆகிய பகுதியிலிருந்து ஆழ்துளை கிணறுகள் மூலமும்,  சோழவரம், செங்குன்றம் ஏரிகளில் இருந்தும்,
சிக்கராயபுரம் கல்குவாரிகளிலிருந்தும் நீர் எடுக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.
குடிநீர் லாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் அதிகமாக அமைத்தும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதே போல் சென்னை நகரின் அருகில் உள்ள சிறிய ஏரிகளில் இருந்து நீர் பெரும் திட்டம் உள்ளது. அதன்படி போரூர் ஏரியில் உள்ள நீரை சுத்திகரிப்பு செய்து தினமும் 4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாதவகையில் கல்குவாரியில் இருந்து தண்ணீர் வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.13.63 கோடி செலவில் தினமும் 30 மில்லியன் லிட்டர்
சென்னைக்கு வழங்கப்படுகிறது.
மேலும் தற்போது பெய்து வரும் பருவமழை, கோடை மழை  நீரை பயன்படுத்தி அதன் மூலமும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வழங்க அரசு உரிய நடவ
டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*