Home » Flash News » இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சிந்து

இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சிந்து

ஜகர்தா, ஆக. 27: இன்று நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டின் பேட்மிண்டன் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், இந்தியாவின் சிந்து 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானேவை வீழ்த்தி வெற்றிக்கண்டார். இதன்மூலம், இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த சிந்து, ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதேபிரிவில், முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன தைபே வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டு, 17-21, 14-21 என்ற நேர்செட்களில் போராடித் தோல்வி அடைந்தார். இதனால் சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம், இந்தியா பெற்றுள்ள வெண்கல பதக்கங்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. ஆசிய போட்டியில் சாய்னா பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்மிண்டன் இறுதிச்சுற்றில் சிந்து பதக்கம் வெல்லும் பட்சத்தில் பதக்க பட்டியலில் இந்தியாவின் நிலை உயர வாய்ப்புள்ளது. பெரும்பாலும், இறுதிச்சுற்றில் வெள்ளி வென்று வெள்ளி மங்கை என்று அழைக்கப்படும் சிந்து, ஆசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் வெண்கலம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இதனையடுத்து, 7 தங்கம், 10 வெள்ளி, 20 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 9-வது இடத்திலேயே நீடிக்கிறது. 78 தங்க பதக்கங்கள் உட்பட 178 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தையும், 41 தங்க பதக்கங்கள் உட்பட 127 பதக்கங்களுடன் ஜப்பான் 2-ம் இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*