Home » Flash News » தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி, ஆக.24:முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக பராமரிக்க வேண்டும் என்று துணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது. இதன்படி நீர் மட்டத்தை பராமரிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.

இதனால் இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்திருந்தது. அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது.

இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.அதில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை திறந்து விட்டு இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்காது. வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு தமிழகம் திடீரென்று தண்ணீரை திறந்துவிட்டதும் ஒரு காரணம் ஆகும். என கூறி இருந்தது.

இதற்கு இன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல. இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசுதான் காரணம் முல்லைப்பெரியாறு அணையின் 13 மதகுகளை திறந்து விட்டது கேரள அரசுதான் என கூறி உள்ளது.இதனிடையே உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட துணைக் குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணையின்

நீர் மட்டத்தை 139.99 அடியாக தொடர்ந்து பராமரிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு 139 அடியாக பராமரிக்கலாம் என உத்தரவிட்டது. மேலும் இந்த விஷயத்தில் கேரளா தெரிவித்துள்ள புகாருக்கு தமிழக அரசு செப்டம்பர் 6-ந் தேதிக்குள் விரிவான பதில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*