Home » Flash News » திமுகவில் பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி

திமுகவில் பொருளாளர் பதவிக்கு கடும் போட்டி

சென்னை, ஆக.22:திமுகவில் பொருளாளர் பதவிக்கு மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளித்து துரைமுருகனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

திமுக செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து தனது பொருளாளர் பதவியை அவர் ராஜினாமா செய்து பொதுச்செயலாளர் அன்பழகனிடம் கடிதம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் ஏற்கனவே அறிவித்துள்ளார். திமுகவில் பொருளாளர் பதவி என்பது 3-வது பெரிய பொறுப்பாகும். இந்த பொறுப்பில் அண்ணா காலத்தில் எம்ஜிஆரும், அதன் பின்னர் கருணாநிதியும் இருந்துள்ளனர்.

பொருளாளர் பதவியை பிடிப்பதில் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய முதன்மை செயலாளர் துரைமுருகன் இந்த பதவியை விரும்புகிறார். இவர் கட்சியில் அதிக அனுபவமும் வேலூர் மாவட்டத்தில் செல்வாக்கும் பெற்றவர். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோரும் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் பொருளாளர் பதவியை பிடிக்க வியூகம் வகுத்து இருப்பதாக தெரிகிறது.

திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலு, திருச்சியில் செல்வாக்கு பெற்ற கே.என்.நேரு, திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகளாக இருக்கும் கே.பொன்முடி ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு அடி போடுவதாக தெரிகிறது.

இந்த மூத்த தலைவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு அவசியம் தேவை என்று ஸ்டாலின் கருதுகிறார். முக்கிய விஷயங்களில் இவர்களுடன் ஆலோசனை நடத்தி ஸ்டாலின் முடிவு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பொருளாளர் பதவி விவகாரத்தில் மூத்த தலைவர்களை எப்படி சமாதானப்படுத்தி ஒருமனதாக ஒருவரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*