Home » Flash News » காவிரியில் 3 லட்சம் கன அடி நீர் திறப்பு

காவிரியில் 3 லட்சம் கன அடி நீர் திறப்பு

சென்னை, ஆக.17:தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு மேட்டூர் அணைக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் டெல்டா மாவட்டங்களுக்கு பெரும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.மாநில பேரிடர் மையத்தில் நிருபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது கிருஷ்ணசாகர் அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரத்து 22 கன அடிநீரும், கபினி அணையிலிருந்து 68 ஆயிரத்து 333 கன அடி நீரும், பவானியிலிருந்து 65 ஆயிரம் கன அடி நீரும், அமராவதியில் இருந்து 8 ஆயிரத்து 100 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவானது மேலும் 30 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டு தற்போது கர்நாடகாவில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மாயனூரில் நாளை அதிகாலை 3 லட்சம் கன அடி நீர் வரத்து இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஏற்கனவே தமிழக அரசு அறிவுறுத்தியபடி காவிரி கரையோர மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏற்கனவே நாமக்கல், கன்னியாகுமரி, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 410 மக்கள் 96 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலங்கள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் பொது மக்கள் குளிப்பதோ, துணி துவைப்பதோ, குழந்தைகளை விளையாட விடுவதோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதோ போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மீண்டும் மீண்டும் கேட்டு கொள்ளப்படுகிறது.

இன்று காலை கூட திருமண பெண் ஒருவர் ஒகேனேக்கல்லில் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்வதை காண முடிந்தது. இது போன்ற செயல்களில் தான் பொது மக்கள் ஈடுபட வேண்டாம் என திரும்ப திரும்ப கேட்டு கொள்ளப்படுகிறது.

பொது மக்களின் உயிர்களையும், உடைமைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே பொது மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய அறிவுரைகளை ஏற்று முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போன்று நீர்வழிப்பாதைகளில் பலவீனமாக உள்ள கரைகளை பாதுகாப்பு படுத்தும் பணியிலும் பொதுப்பணித்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே வெள்ள அபாயம் குறித்து அரசு அவ்வப்போது பொது மக்களுக்கு வெளியிட்டு வரும் தகவலை முழுமையாக பயன்படுத்தி கொண்டு பயன்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*