Home » Flash News » விஸ்வரூபம்-2 : ரசிகர்கள் ஏமாற்றம்

விஸ்வரூபம்-2 : ரசிகர்கள் ஏமாற்றம்

சென்னை, ஆக.10:விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கிடையே உடன்பாடு ஏற்படாததால் கமலின் விஸ்வரூபம்-2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் விஸ்வரூபம்-2 படம் ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் விஸ்வரூபம்-2. இப்படம் தமிழ், இந்தியில் நேரடியாகவும், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ள விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களிடம் அதிக பணம் கேட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் இந்த படத்தை இவ்வளவு பணம் கொடுத்து வாங்க முடியாது என தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் படம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்த பிரச்சனையால் கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே சென்னையில் இன்று காலை 8.00 மணிக்கு ஒரு சில தியேட்டர்களில் விஸ்வரூபம்-2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. நேற்றிரவு வெளிநாடுகளிலும் சிறப்பு பிரிமியம் ஷோ திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாகத்தை விட மிகவும் சிறப்பாக வந்துள்ளதாகவும் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் வசனங்கள் ரசிக்கும் படியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கமல் மற்றும் சக நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தை வெளியிட தடைகோரி பிரமிட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து அந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*