Home » Flash News » திமுகவில் அடுத்து என்ன?

திமுகவில் அடுத்து என்ன?

சென்னை, ஆக.9: கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திமுக கட்சி அமைப்பில் அதிரடி மாற்றங்கள் நடைபெற உள்ளன. விரைவில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் இந்த மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்.

திமுக தலைவர் பொறுப்பை 1969 லிருந்து மறையும் வரை வகித்து வந்தவர் கருணாநிதி. 50 ஆண்டு காலத்தில் அவர் கேள்விக்கு அப்பாற்பட்ட தலைவராக திகழ்ந்தார். ஒவ்வொரு பொதுக்குழு கூட்டத்திலும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுக தலைவர் பதவி காலியாக இருக்கிறது. கருணாநிதி தீவிர அரசியலில் ஈடுபடாத நிலையில் ஒன்றரை ஆண்டு காலம் ஓய்வெடுத்து வந்தார். 2017 ஜனவரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருணாநிதியின் மறைவையொட்டி ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்ட உருக்கமான கடிதத்தில் திருவாரூரில் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழாவில் ஜூன் 3 ம் தேதி பேசியபோது, ‘உங்கள் சக்தியில் பாதியை தாருங்கள் என்றேன். அந்த சக்தியையும் அண்ணாவிடம் நீங்கள் இரவலாக பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன் தலைவரே தருவீர்களா?’ என கூறியிருந்தார். அண்ணா இறந்தபோது அவரது இதயத்தை இரவலாக கேட்பதாக கருணாநிதி கவிதை எழுதியதை ஸ்டாலின் தனது கடிதத்தில் மேற்கண்டவாறு சுட்டிகாட்டியுள்ளார்.

முரசொலி பத்திரிகையிலும் அவர் கருணாநிதியை போலவே உங்களில் ஒருவன் என்ற பெயரில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். எனவே அடுத்து நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் எந்த போட்டியும் இன்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரியவந்துள்ளது.2014 ல் திமுகவிலிருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டுவிட்டதால் கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எந்த போட்டியும் இருக்காது என தெரியவருகிறது. 2016 சட்டமன்ற தேர்தலின்போது ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நமக்கு நாமே

என் ற பெயரில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். இது கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என்ற தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆகஸ்ட் 19 ல் நடைபெறுவதாக இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவது முடிவடைந்தவுடன் பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் துவங்கி விட்டதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.பொதுச் செயலராக நீண்ட நாட்களாக இருந்து வரும் அன்பழகனையும், வயது முதிர்வு காரணமாக, அப்பொறுப்பில் இருந்து விடுவித்துவிடலாம் என்ற யோசனைக்கும் ஸ்டாலின் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பொதுச் செயலர் பொறுப்பில் மூத்த தலைவர் துரைமுருகனை அமர்த்தும் யோசனையிலும் ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அழகிரிக்கு கட்சியில் பதவி அளிக்க வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வரும்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் மூலம் அழகிரியை சமதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அழகிரி கட்சியில் முக்கிய பதவியும், அவரது மகன் துரை தயாநிதிக்கு முரசொலி அறக்கட்டளையில் பதவி அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*