Home » Flash News » கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை, ஆக.9: திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் வந்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

இரவு முதல் விடிய விடிய தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில தொண்டர்கள் மொட்டை அடித்தும் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் உடல் நேற்று மாலை 7 மணியளவில் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் உள்ள இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதி அமைப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் 1.23 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. சமாதி அமைந்துள்ள இடத்தை சுற்றி விளக்குகள் அமைக்கும் பணி நேற்று மாலையே நடைபெற்றது. நள்ளிரவில் இருந்தே ஏராளமான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று காலை கருணாநிதியின் சமாதி உதயசூரியன் வடிவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. அந்த இடம் முழுவதும் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். விஐபிக்கள் வந்தால் மட்டும் தடுப்புகள் திறந்து சமாதியில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் தடுப்புக்கு வெளியே நின்று வணங்கிவிட்டு செல்கிறார்கள்.

திருப்பூரை சேர்ந்த வினோத்கண்ணா என்பவர் உள்ளிட்ட சில திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். காலை 10 மணியளவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்தார். அவருடன் மா.சுப்ரமணியன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடன் வந்தனர். கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டு சென்றனர்.

கவிஞர் வைரமுத்து காலை 6 மணியளவில் தனது மகன்கள் கபிலன், கார்க்கி ஆகியோருடன் வந்தார். கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார் அவர் கூறுகையில் கருணாநிதி எனக்கு தந்தை போன்றவர். அவரால் நான் வளர்ந்தேன். ஒரு மகன் தந்தைக்கு செய்யும் கடமையை நான் செய்கிறேன் என்றார்.
இதனிடையே வெளியூர்களிலிருந்து வேன் மற்றும் வாகனங்களில் திமுகவினர் வந்த வண்ணம் இருப்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைத்து கூட்டத்தை ஓழுங்கு படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். பொதுப்பணித்துறை சார்பில் தற்காலிக நிழல் கூடாரம் அமைக்கும் பணியும், ஜேசிபி இயந்திரம் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*