Home » விளையாட்டு » திறமையாக பந்துவீசியும் தோற்றோம்: கோலி வேதனை

திறமையாக பந்துவீசியும் தோற்றோம்: கோலி வேதனை

பர்மிங்ஹாம், ஆக.5: இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. பௌலர்கள் திறமையாக பந்து வீசியும் பேட்டிங்கில் திணறியதால் தோல்வி அடைந்தோம் என்றும் இஷாந்த் மற்றும் உமேஷ் யாதவ் திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதாகவும் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாம் எட்பாகஸ்டன் மைதானத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 287 ரன்களுக்கும், இந்தியா 274 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி 149 ரன்களுடன் சதமடித்தார்.

இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 193 ரன்கள் இந்தியாவைக் காட்டிலும் முன்னிலை பெற்றிருந்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என இந்தியா தனது இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்கியது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட முடிவில் விராட் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை இந்தியா எடுத்திருந்தது.  வெற்றிக்கு 84 ரன்கள் தேவை என்ற நிலையில் சனிக்கிழமை நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆனால் இங்கிலாந்தின் அபார பந்துவீச்சை இந்திய வீரர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. தினேஷ் கார்த்திக் 20, ஹார்திக் பாண்டியா 31, இஷாந்த் சர்மா 11, முகமது சமி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் விராட் கோலி 93 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 54.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்களை மட்டுமே இந்திய அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், சாம் கரன், அடில் ரஷீத் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ஓரளவு ஆடி வந்த நிலையில் ஸ்டோக்ஸ் ஓரே ஓவரில் கோலி, பாண்டியா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தி தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தனது 1000-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் இங்கிலாந்து இப்போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் கேப்டன் விராத் கோலி அளித்த பேட்டியில், இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையிலும் நாங்கள் மீண்டு வந்தோம். நாங்கள் பேட்டிங்கில் மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம் இன்னிங்ஸில் நமது பந்துவீச்சாளர்கள் திறமையாக வீசியும் வெற்றியை தவற விட்டோம்.

இஷாந்த் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட்டை காப்பதில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் அடுத்த ஆட்டங்களில் நாம் வெற்றி பெற தாழ்வு மனப்பான்மையை அகற்றி நேர்மறை, அச்சமற்ற தன்மையுடன் விளையாடுவது முக்கியமாகும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*