Home » தமிழ்நாடு » வேகமாக நிரம்புகிறது வீராணம் ஏரி

வேகமாக நிரம்புகிறது வீராணம் ஏரி

திருச்சி,ஜூலை 25:5 ஆண்டுகளுக்கு பின் காவிரி நிரம்பியுள்ளதால் மேலணையிலிருந்து வினாடிக்கு 150 கன அடி நீர் வருகிறது.இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் திறப்பால் வீராணம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வீராணம் நிரம்பினால் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வரும் சென்னை வாழ்மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 19-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டார்.நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

காவிரி பெருக்கெடுத்து ஓடி வருவதால் முக்கொம்பு மேலணையில் இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. முக்கொம்பு மேலணையின் 44-வது மதகில் இருந்து வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி அங்கு தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. லால்குடி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி மதகின் வழியாக தண்ணீரை திறந்து விட்டு மலர்களை தூவினார்.

முக்கொம்பிற்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த தண்ணீர் இன்று இரவுக்குள் 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து சேர்ந்ததும் முக்கொம்பில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி தண்ணீர் போக மீதம் உள்ள சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்லும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இதனால் வீராணம் ஏரி விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரியில் தண்ணீர் அதிக அளவில் வருவதால் முக்கொம்பு மேலணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதே போல் கம்பரசம் பேட்டை தடுப்பணையிலும் பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக சிவப்பு கொடி கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், புனித நீராடுவதற்காக வருபவர்கள் இரும்பு கம்பிகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பகுதியில் மட்டுமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*