Home » குற்றம் » குழந்தைகளை பள்ளிக்கு விட சென்றவர் கொலை

குழந்தைகளை பள்ளிக்கு விட சென்றவர் கொலை

சென்னை, ஜூலை 12: குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை, மர்மகும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவான்மியூர், வண்ணாந்துரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர், மனைவி கலைவாணி, மகன் கார்த்திகேயன், மகள் சாய்பிரகதியுடன் அடையாறு மல்லிகைப்பூநகரிலுள்ள மாமியார் வீட்டில் வசித்துவருகிறார். இந்த நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் இந்திராநகரில் உள்ள பள்ளிக்கு தனது குழந்தைகளை பைக்கில் அழைத்து சென்றுள்ளார் சுரேஷ்.

குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு சிறிது தூரம் சென்றுக்கொண்டிருக்கையில், திடீரென ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் சுரேஷை வழிமறித்துள்ளது. அதிர்ச்சியடைந்த சுரேஷ், ஏதோ தவறு நடக்கவுள்ளதாக யூகித்து முடிப்பதற்குள், ஆட்டோ, பைக்கில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளது.

நிலைக்குலைந்து போன சுரேஷ், ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் சுரேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில் சுரேஷிற்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது. இதற்கு பழித்தீர்க்கவே சுரேஷ் கொல்லப்பட்டரா? அல்லது தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அடையாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*