Home » முக்கிய செய்தி » முக்கிய அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது

முக்கிய அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது

சென்னை, ஜூலை 12: தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழக அணைகள் சராசரியாக பாதி கொள்ளளவை எட்டி விட்டது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி விட்டன. முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்திருக்கிறது.

வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை போன்றவற்றின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. கேரளா, கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதை யொட்டி இந்த மாவட்ட எல்லையோர பகுதிகளில் உள்ள நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

கேரளா, தமிழகத்தில் ஜூலை 17-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய அணைகளின் மொத்த கொள்ளளவு 198 டிஎம்சி ஆகும். இதில் இப்போதைய நிலவரப்படி 40 சதவீதம் தண்ணீர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் 11-ல் இருந்த நிலவரத்தை விட 4 மடங்கு அதிகம் ஆகும். கர்நாடகத்தில் மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணையே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் முக்கிய இடமாக கருதப்படுகிறது. இந்த அணை தனது முழு கொள்ளளவில் 93 சதவீதத்தை எட்டி விட்டதால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர், திருப்பூரில் அமராவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் இந்த அணைகளின் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

இதனிடையே தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. குமரி மாவட்டத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*