Home » Flash News » கமல் கட்சியில் மாற்றம்

கமல் கட்சியில் மாற்றம்

சென்னை, ஜூலை 12:கமல்ஹாசன் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை முழு பலத்துடன் சந்திக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசை பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் நடிகர் கமல்ஹாசன் தாக்கி பேசியிருந்தார். இதனையடுத்து அரசியலுக்கு வந்து பேசுங்கள் என அமைச்சர்கள் அவருக்கு பதிலடி கொடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். மேலும் கட்சியில் உறுப்பினர்களாக இணைவதற்கு விசில் என்ற செயலியையும் தொடங்கி வைத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசினார்.

மேலும் புதுடெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் தனது கட்சிக்கு அங்கீகாரம் வேண்டி மனு செய்திருந்தார். சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியது.

இந்த அங்கீகாரத்தை பெறுவதற்காக கமல்ஹாசன் டெல்லி சென்றிருந்தார். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இதனால் தேர்தலில் காங்கிரஸ் உடன் அவர் கூட்டணி அமைப்பது உறுதி என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் முதல் கொடியேற்று விழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சி தலைவர் கமல் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்ததுடன் கட்சியின் புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். அதன்படி கட்சியின் தலைவராக கமல்ஹாசன், துணைத் தலைவராக கு.ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா (எ) சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

ஏற்கனவே செயல்பட்டு வந்த தற்காலிக உயர்நிலைக்குழு களைக்கப்பட்டு அதிலிருந்த ஸ்ரீபிரியா, கமீலாநாசர் உள்ளிட்ட 16 பேரும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஸ்ரீபிரியா, கமீலா நாசர், மௌரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து கமல் தரப்பில் கூறியதாவது:-

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்கள் தலைவர் கமல்ஹாசனின் ஒப்புதலோடு தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்திற்கு 2 பேர் வீதம் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள மாவட்டங்களில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்க்கை, கட்சியின்செயல்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள உள்ளனர்.
எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பவர்.

எனவே ஒரு கட்சியை தொடங்கி அதற்கு முறையாக அங்கீகாரம் பெற்று அதில் பொறுப்பாளர்களை நியமித்து விட்டு பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தற்போது அது நிறைவேறி உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் எதுவாக இருந்தாலும் மக்கள் நீதி மய்யம் முழு பலத்துடன் களம் காணும் என்று தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*