Home » Flash News » வேகமாக நிரம்பும் மேட்டூர்

வேகமாக நிரம்பும் மேட்டூர்

சென்னை, ஜூலை 11:கர்நாடகத்தில் தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை மத்திய நீர் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் ஹுராங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகள் அமைந்துள்ள குடகு, மைசூரு, மாண்டியா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கபினி அணை கிட்டத்தட்ட நிரம்பி விட்டது. இந்த அணை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் இந்த அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் சுமார் 3 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நீர் ஆணையம் தமிழக அரசுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு மத்திய நீர் ஆணையத்தின் அறிவிப்பு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 66 அடியை தாண்டி விட்டது. அணையின்
நீர் மட்டம் ஜூன் 12-ந் தேதி 39 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். இப்போது வந்து கொண்டிருக்கும் தண்ணீர் இன்னும் 4 நாட்களுக்கு நீடித்தால் அணை நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி நேற்று மேட்டூர் அணையை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டு கொண்டார்.
கலெக்டர் ரோகினி கூறுகையில், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் பதட்டம் அடைய தேவையில்லை என்றார்.

இதனிடையே கேரளா மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் பவானி சாகர், அமராவதி அணைகள் நிரம்பி வருகின்றன. சிறுவாணி அணை 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நிரம்பி இருக்கிறது.

மேட்டூர் அணையில் மொத்தம் 93.4 டிஎம்சி தண்ணீரை தேக்கலாம். தற்போது சுமார் 30 டிஎம்சி தண்ணீர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டினால் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுவை சாகுபடி காலதாமதமாகி விட்டாலும் கூட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளை மேற்கொள்ளலாம் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*